தமிழ்நாடு

3 தொகுதிகளுக்கும் இப்போதே தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published

on

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ஆம் தேதியே இடைத்தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது என உத்தரவிட்டு திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினமே 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் தற்போது இல்லை எனவும் கூறியது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் இதனை திமுக எதிர்த்தது, இதில் உள்நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டியது. 3 தொகுதிகளையும் சேர்த்து 21 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடியது திமுக. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தமுடியும்; அவசர கதியில் நடத்தமுடியாது என கூறியது.

தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 18-ஆம் தேதியே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த உத்தரவிடமுடியாது என உத்தரவு பிறப்பித்து திமுகவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது.

seithichurul

Trending

Exit mobile version