தமிழ்நாடு

தமிழிசை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

Published

on

கேரள முதல்வர் பினராயி விஜயனை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு பின்னர் அங்கு தினமும் பதற்றம் நிலவி வருகிறது. இதனை கையாண்டு வரும் கேரள அரசை பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆங்காங்கே கேரளா அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நாடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் இதன் எதிரொலிப்பு இருக்கத்தான் செய்கிறது.

முன்னதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலையில் அவமதிக்கப்பட்டதாக கூறி பாஜகவினர் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வருக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் கேரள முதல்வருக்கு எதிராக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தலைமையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து தமிழிசை உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 150 பேர் மீது பல்லாவரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, உருவ பொம்மையை எரித்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version