தமிழ்நாடு
27200 பேரை திமுகவில் இணைத்த தங்க தமிழ்ச்செல்வன்!
அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் இதுவரை 27200 பேரை திமுகவில் இணைத்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
டிடிவி தினகரனின் அமமுகவில் முக்கிய தலைவராக வலம் வந்த தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுடன் ஏற்பட்ட மோதலால் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து ஸ்டாலினை தேனிக்கு வரவழைத்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி அதில் தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைய வைத்தார் தங்க தமிழ்ச்செல்வன்.
இதனையடுத்து தொடர்ந்து உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தங்க தமிழ்ச்செல்வன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தேனி மாவட்டத்தில் திமுகவில் இணைந்தவர்களுக்கான உறுப்பினர்களின் படிவங்களையும், அதற்கான கட்டணத் தொகையையும் ஒப்படைத்தார்.
இதனையடுத்து திமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், கழக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கழகத்தில் இணைந்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த 27,200 உறுப்பினர்களின் படிவங்களை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் ஒப்படைத்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.