இந்தியா

இந்தியாவில் இனி டிக்டாக் இல்லை.. ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் பணிநீக்கம்..!

Published

on

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் டிக் டாக் செயலியை கொண்டு வர சீன நிறுவனம் பெரும் முயற்சி செய்தது. ஆனால் இனி இந்தியாவில் தங்களது நிறுவனம் செயல்பட முடியாது என்பதை தெரிந்து கொண்ட டிக் டாக் நிர்வாகம் இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது என்பதும் இதனால் ஒரு பகுதி ஊழியர்களை பணி நீக்கம் செய்த டிக் டாக் நிர்வாகம் மீண்டும் இந்தியாவில் டிக் டாக் செயலியை கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் மீதி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்து வந்தது.

இந்த நிலையில் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இந்திய அரசு டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க மறுத்துவிட்டது என்பதால் இனி இந்தியாவில் டிக் டாக் செயலி செயல்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள டிக் டாக் ஊழியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் 40 பேர் வேலை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 9 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் டிக் டாக் அறிவித்துள்ளது.

டிக் டாக் நிறுவனத்தில் வேலை பார்த்த இந்திய ஊழியர்களுக்கு பிப்ரவரி 28 தான் கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் காரணமாக வேறு வழி இன்றி இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோம் என்றும் இனிமேல் இந்தியாவில் டிக் டாக் செயலியை தொடங்கப் போவதில்லை என்றும் டிக் டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. டிக் டாக் தடை செய்யப்பட்டதால் இந்தியாவைச் சேர்ந்த வேறு சில செயலிகள் மிகப்பெரிய அளவில் பயன்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிராத டேட்டாவை பயன்படுத்துவதாக தடை செய்யப்பட்ட டிக் டாக் அதன்பிறகு பல்வேறு முயற்சிகள் செய்தும் இந்திய அரசாங்கம் அந்த செயலியை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட டிக் டாக் இந்தியாவில் இருநூறு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருந்தது என்றும் நாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டு சந்தையாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டிக் டாக் வெளியேற்றத்தால் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version