இந்தியா

கடந்த 3 ஆண்டுகளில் 1,861 குழந்தை தொழிலாளர் வழக்குகள்: மத்திய அமைச்சர் தகவல்!

Published

on

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் உபேந்திரா சிங் ராவத் மற்றும் விஜய் பாகெல் ஆகிய இருவரும், நம் நாட்டில் குழந்தை தொழிலாளர்களை பற்றிய வழக்குகளின் எண்ணிக்கையைப் பற்றிய கேள்வியை எழுப்பினர். இவர்களின் கேள்விக்கு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை மந்திரி ரமேஸ்வர் தெளி, எழுத்துப் பூர்வமாக இன்று அவையில் பதில் அளித்தார்.

குழந்தை தொழிலாளர் வழக்குகள்

மத்திய மந்திரி ரமேஸ்வர் தெளி அளித்த பதிலில், நம் நாட்டில் 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், கடந்த 3 வருடங்களில் மொத்தமாக 1,861 வழக்குகள் பதிவாகி இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டில் சுமார் 772 குழந்தை தொழிலாளர் வழக்குகளும், 2020 ஆம் ஆண்டில் 476 குழந்தை தொழிலாளர் வழக்குகளும் பதிவாகி உள்ளது. அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டில் சுமார் 613 குழந்தை தொழிலாளர் வழக்குகள் பதிவாகி உள்ளது.

அதிகபட்ச வழக்குகள்

இதில் அதிகபட்சமாக 685 வழக்குகள் தெலங்கானா மாநிலத்தில் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 186 வழக்குகளுடன் அசாம் மாநிலம் உள்ளது. மேலும், மிக குறைந்த அளவில் அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சத்தீஷ்கர், மேகாலயா, டாமன் டையூ மற்றும் பிற மாநிலங்களில் 2 குழந்தை தொழிலாளர் வழக்குகள் பதிவாகி உள்ளது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு, மத்திய அரசு பன்முக செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கை, இலவச கல்வி உரிமை, புனரமைப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி உள்பட பல விரிவான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் குழந்தை தொழிலாளர் வழக்குகளை அரசு கட்டுப்படுத்தி வருகிறது என மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக நீக்குவதற்கு பல்வேறு சட்டங்களும் உள்ளன என உறுப்பினர்களிடம் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version