தமிழ்நாடு

2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு: கலெக்டர் உத்தரவால் ராமநாதபுரத்தில் பரபரப்பு!

Published

on

ராமநாத மாவட்ட கலெக்டர் திடீரென இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சேர்ந்தவர் இமானுவேல் சேகரன் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர் என்பதும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பரமக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ஆம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்போது சில ஆண்டுகளில் எதிர்பாராத விதமாக கலவரம் வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இமானுவேல் சேகரன் நினைவேந்தல் தினத்தன்று பெரும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவேந்தல் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டும் கலெக்டரின் அனுமதியை பெற்று ஒருசில குறிப்பிட்ட நபர்களுடன் வந்து அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் ஆனால் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட எந்தவித வாகனங்களும் நினைவஞ்சலி செலுத்தும் இடத்தில் அனுமதி கிடையாது என்றும் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அஞ்சலி செலுத்தி விட்டு அமைதியாக திரும்பிச்செல்ல வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ஜாதி சம்பந்தமான எந்த வித கோஷங்கள் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என்றும் கலெக்டர் அறிவிப்பு செய்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு ந்தகம் ஏற்படுவதை தடுப்பதற்காகவே இன்று முதல் 2 மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கூடுதல் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version