சினிமா செய்திகள்

‘100% தியேட்டர் திறப்பு தற்கொலைக்கு சமம்’- விஜய், சிம்புவுக்கு டாக்டரின் உருக்கமான கடிதம்!

Published

on

பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படமும், சிலம்பரசன் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படமும் வெளியாகின்றன.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களை, நவம்பர் மாதம் திறந்து கொள்ள அனுமதி கொடுத்தது தமிழக அரசு. அதே நேரத்தில் திரையரங்குகளில், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுப்பாட்டை தற்போது நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இதற்கு சினிமா விரும்பிகளும், அத்துறையைச் சேர்ந்தவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் வீரியமாக இருக்கும் நேரத்தில், மூடிய அறையில் 3 மணி நேரம் கூட்டமாக அமர்ந்திருப்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் ஆகும் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அரவிந்த் ஶ்ரீநிவாஸ் என்னும் மருத்துவர் ஒருவர், விஜய்க்கும் சிலம்பரசனுக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை இட்டுள்ளார். அது வருமாறு:

‘அன்பிற்குரிய நடிகர் விஜய் சார் மற்றும் சிலம்பரசன் சார் மற்றும் மதிப்பிற்குரிய தமிழ அரசுக்கு,

நான் சோர்ந்து போயுள்ளேன். அனைவரும் சோர்ந்து போயுள்ளோம். என்னைப் போன்ற பல்லாயிரம் மருத்துவர்களும் சோர்ந்து போயுள்ளார்கள். சுகாதாரப் பணியாளர்களும் சோர்ந்துள்ளார்கள். காவல் அதிகாரிகளும் சோர்ந்துள்ளார்கள். துப்புரவுத் தொழிலாளர்களும் சோர்ந்துள்ளார்கள்.

எதிர்பாராத பெருந்தொற்று காலத்தில், முடிந்தவரை பாதிப்புகளை குறைவாக வைக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் அயராது உழைத்தோம். நாங்கள் எங்கள் பணிகளைப் பெருமைப் படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. எங்கள் முன்னால் கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டன்ட் காட்சிகளை செய்வதில்லை. நாங்கள் ஹீரோக்கள் கிடையாது. ஆனால், சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது. ஒரு சிலரின் சுயநலத்திற்காகவும், பேராசைக்காகவும் நாங்கள் இரைகளாக ஆக்கப்படுவதை விரும்பவில்லை.

இந்த பெருந்தொற்று இன்னும் முடிவடையவில்லை. இதனால் இன்னும் பல மக்கள் தினம் தினம் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான நேரத்தில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி என்பது தற்கொலைக்குச் சமமானது. இந்த முடிவை அறிவித்த நிர்வாகிகள் அல்லது ஹீரோவாக தங்களை சொல்லிக் கொள்பவர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்கள் கூட்டத்தோடு அமர்ந்து படம் பார்க்கப் போவதில்லை. இது பண்டமாற்று முறையைப் போல உள்ளது. காசு கொடுத்தால் உயிரைக் கேட்கும் முறைதான் இது.

மெதுவாக அணைந்து கொண்டிருக்கும் நெருப்பை மீண்டும் உயிர்பிக்காமல், இந்த பெருந்தொற்றிலிருந்து எப்படி மெல்ல விடுபடுவது என்பதில் நாம் கவனம் செலுத்துவோமா. இந்த பெருந்தொற்று இன்னும் முழுவதுமாக முடிவுக்கு வரவில்லை.

இந்த பதிவை இடுவதற்கு முன்னர், நாம் ஏன் இன்னும் அபாயக்கட்டத்தில்தான் இருக்கிறோம் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அதனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

மிகவும் சோர்வாக,
ஒரு பாவப்பட்ட, சோர்வடைந்துள்ள மருத்துவர்.’

இவ்வாறு பதிவிட்டுள்ளார் மருத்துவர் அரவிந்த். அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

Trending

Exit mobile version