தமிழ்நாடு

100 கோடி ரூபாய் ஊழல்: அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published

on

அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, சிபிஐ, தமிழக தலைமை செயலாளர், அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி அவருடைய பினாமி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு சதி செய்ததாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் மாவட்ட ஆணையர்களிடம் புகார் கொடுத்தது. ஆனால் இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்க நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 2014-15 ஆண்டுகளில் கோவை மாநகராட்சியில் மட்டும் 66 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 188 டெண்டர்கள் கேசிபி இன்ஜினியர்ஸ், எஸ்பி பில்டர்ஸ் நிறுவனங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய நிறுவனங்களே, சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு டெண்டரில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது என அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேசிபி நிறுவனத்தின் தலைவராக உள்ள சந்திரசேகர் என்பவர் அமைச்சரின் உறவினர். அவர் ஆளுங்கட்சி பிரமுகராக இருக்கிறார். இந்த டெண்டரில் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கத்தின் சார்பாக வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் டெண்டர்கள் அனைத்தும் ஒரே கணினி ஐபி முகவரியில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சாலைகள் போடும் போது முறையாகச் சாலைகள் அமைக்காமல் பழுதான சாலைக்கு மேல் சாலைகள் அமைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது.

இதனை கேட்ட நீதிபதிகள், சென்னை கோவை மாநகராட்சி நிர்வாகங்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, சிபிஐ, தமிழக தலைமை செயலாளர், அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

seithichurul

Trending

Exit mobile version