இந்தியா

பப்ஜி விளையாடிய 10 பேர் கைது: போலீஸ் அதிரடி!

Published

on

பப்ஜி விளையாட்டானது இளைஞர்கள், மாணவர்களை பெரியளவில் பாதிக்கிறது. இந்த விளையாட்டானது அவர்களை அடிமைப்படுத்துகிறது. எனவே இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன.

இதனையடுத்து நாட்டில் முதன்முறையாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 6-ஆம் தேதி முதல் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மீறியும் பப்ஜி விளையாடினால் சட்டப்பிரிவு 144 மற்றும் 37(3) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் கடுமையாக எச்சரித்திருந்தனர். மேலும் இதனை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜ்கோட் பகுதிக்கு அருகில் கல்லூரி ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ள உணவகத்தில் 19 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் 10 பேர் பப்ஜி விளையாடியதை போலீசார் பார்த்துள்ளனர். அவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அதில் 6 பேர் மாணவர்கள் என்பதால் அன்றே ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

மற்றவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து தெரிவித்த இந்த சிறப்பு குழுவின் ஆய்வாளர், இந்த விளையாட்டு இளைஞர்களை மிகவும் அடிமைப்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று நாங்கள் அவர்கள் அருகில் வருவதைக் கூட கவனிக்கவில்லை. அந்தளவுக்கு விளையாட்டில் மூழ்கியுள்ளனர் என தெரிவித்தார்.

Trending

Exit mobile version