தமிழ்நாடு

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் தரப்படும்: திருநெல்வேலி மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

Published

on

இன்றைய தொழில்நுட்ப உலகில், பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனை மறுசுழற்சி செய்தால், ஓரளவு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றாலும், மறுசுழற்சிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. அப்படி பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஒரு சிறப்பான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அது தான், பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.1 வழங்கும் திட்டம். இத்திட்டத்தின் மூலம், பிளாஸ்டிக் குப்பைகளை குறைத்து மறுசுழற்சி முறையை அதிகரிக்க முடியும் எனவும், சுற்றுச்சூழலப் பாதுகாக்க முடியும் எனவும் இத்திட்டம் கூறுகிறது.

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய்

காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்தால் 1 ரூபாய் தரப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், நெகிழி இல்லா மாநகரத்தை உருவாக்கவும் காலியான பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சோதனை முயற்சி

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் வழங்கும் திட்டத்தின் சோதனை முயற்சியாக, தச்சநல்லூர் மண்டலத்தில் காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிலரும் இத்திட்டத்தின் படி, பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து பணம் வாங்கிக் கொள்கின்றனர்.

மறுசுழற்சி

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணம் கொண்ட பொதுமக்கள், இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வந்து தரலாம். இவ்வாறு பெறப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.

இதனால், சுற்றுச்சூழலை நம்மால் காக்க முடியும். இனிவரும் நாட்களில் இத்திட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்குமானால், வெகு விரைவாகவே திருநெல்வேலியை நெகிழி இல்லா மாநகராட்சியாக மாற்ற முடியும்.

Trending

Exit mobile version