தமிழ்நாடு

வெள்ளை அறிக்கை: ‘அந்த ஒரு விஷயம் கவலையா இருக்கு’- டிடிவி தினகரன் வேதனை

Published

on

தமிழக அரசு இன்று பொருளாதாரம் குறித்தான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டு கடந்த கால அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

குறிப்பாக வெள்ளை அறிக்கையில், தமிழ்நாட்டின் கடன் 5.5 லட்சம் கோடியைத் தாண்டி விட்டதாக எச்சரிக்கைத் தகவலை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்நிலையில் இந்த நிதிநிலை அறிக்கை குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், டிடிவி தினகரன், ‘தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.

அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ அமைந்துவிடும். அதற்குப் பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. ஒரு லட்சம் கோடியை அதற்கு காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டு பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே, யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version