தமிழ்நாடு

தமிழ் மக்களுக்காக கவலைப்படும் ஒரே தலைவன் மோடி- சொல்கிறார் அமித்ஷா!!!

Published

on

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான அமித்ஷா, தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியை தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது என்று பேசியுள்ளார்.

விழுப்புரத்தில் பாஜக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா மேலும் கூறியதாவது:-

நமக்கெல்லாம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பற்றி தெரியும். லஞ்சம், லாவண்யம், ரௌடியிசம், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி இவற்றை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் எம்.ஜி.ஆர். வழியில் மோடியின் வழிகாட்டுதலின்பேரில் நல்ல பாதையில் தமிழகத்தை கொண்டு செல்லும். எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டினார்.

சமீபத்தில்கூட தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, காலம் சென்ற எடப்பாடி பழனிசாமியின் தாயாரை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்று தரக்குறைவான வார்த்தைகளை தி.மு.க.வினர் பேசி வருகிறார்கள். ஏற்கனவே முந்தைய காலங்களில் கூட ஜெயலலிதாவை பற்றி இது போன்ற பல அவதூறு கருத்துகளைச் சொல்லியுள்ளனர்.

நான் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் தமிழக மக்களை காப்பாற்றியதில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தமிழக மக்களை பற்றி கவலையில்லை. சோனியா காந்திக்கு ராகுலை பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும் மட்டுமே கவலை. இவர்கள் தங்களது பிள்ளைகளை பற்றித்தான் கவலைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் மோடிக்கு தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் இருக்கிறது. உலகமெங்கும் செல்லும் இடமெல்லாம் தமிழில் உள்ள குறளை மேற்கோள் காட்டியே அவர் பேசி வருகிறார். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியை தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது. உங்களிடம் ஒரு விஷயத்தை கேட்க வந்துள்ளேன், இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா உரையாற்றினார்.

Trending

Exit mobile version